அரசியல் தலைகளின் நகரமா, அதிகார வர்கத்தின் நகரமா, கூலிப்படைகளின் நகரமா, கோவில்களின் நகரமா, ரோட்டோர இட்லிக் கடைகளின் நகரமா இருக்குற, இருந்த மதுரையில மக்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக... இல்லையில்லை... வேகமாக மாறி வருது... வேறொன்னுமில்ல பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் தான்.
முன்னாடில்லாம் அரசியல் மாநாட்டு சமயத்துல, பெரிய பணக்காரர்களோட குடும்ப விழா சமயத்துல, சாமி திருவிழா சமயத்துலயும் விளம்பரமாக சுவத்துல எழுதுவாங்க. தட்டி போர்டு வைப்பாங்க. சின்னதா போஸ்டர் ஓட்டுவாங்க. இதனால ஆர்ட்ஸ் கலைஞர்களுக்கு வேலையும் இருந்துச்சு. அப்புறம் பிளக்ஸ்ங்கற தொழில்நுட்பம் வந்த பிறகு அவங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. சின்ன சைசுல இருந்து கண்ணால பாக்க முடியாத அகலத்துக்கு பெருசா பெருசா பிளக்ஸ் போர்டு வைக்க ஆரம்பிச்சுடாங்க..
எங்க பாத்தாலும் பளீர் போகஸ் லைட்டோட பிளக்ஸ் போர்டுகள் மின்னுது. கிராபிக்ஸ்னு புகுந்து விளையாடறாங்க. அரசியல் தலைவர்ல இருந்து தொண்டன் வரைக்கும் பல்ல காட்டிட்டு மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குற அவலமும் பிளக்ஸ் மூலமா வந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு எடுத்துக்கிட்டாலும், இந்த சாதாரண மக்களின் பிளக்ஸ் ஆசை இருக்கே, அதான்யா ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு. அதிலும் மதுரையில் பிளக்ஸ் பேய் பிடித்து ஆட்டும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த பேய்களை தனியா அடையாளம் காட்டி சங்கடங்களை பெற எனக்கு விருப்பமில்லைங்க.
கல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, என எல்லாத்துக்கும் பிளக்ஸ் வைக்கறாங்க. இல்ல விழாங்கற பேர்ல மண்டப வாசலை மறைச்சு, ரோட்டை மறைச்சு, கடைகளை மறைச்சு அவங்க பிளக்ஸ் பேனர் வைக்குற இடங்களோட செலக்சன் இருக்கே, மதுரை செல்லூர் பகுதிக்கு வந்து பாருங்க. MM லாட்ஜ் பாலம் ஸ்டேசன் ரோட்ல இருந்து, தத்தனேரி ESI மருத்துவமனை வரை இருக்குற பகுதிகள் பிளக்ஸ் போர்டுகளால் எந்நேரமும் பிஸியா இருக்கும். அதில்லாம, பிளக்ஸ் பேனர் சைஸ் பார்த்தா அசந்து போயிருவிங்க. மாடி கைப்பிடி செவுத்துல நீள் செவ்வகமா அடிச்சு ஒட்டியிருப்பானுங்க. ஒரு ஓட்டு வீட்டு முன்னாடி பார்த்தேன் பாருங்க அவிங்க கலைநயத்தை... ஓட்டு மேற்கூரையில் முன்பக்கம் முக்கோண வடிவமா இருக்குமே, அதுக்கேத்த மாதிரி முக்கோணமா பிளக்ஸ் அடிச்சி ஒட்டியிருக்காங்க. இப்படி பிளக்ஸ் மோகத்தோட பகட்டு காட்டுறவங்க பணத்தையும் அவங்க நகை நட்டுகளையும் டிஸைன் டிஸைன்னா அடிச்சு ஒட்டுவாயிங்க.

பிறந்த குழந்தைல இருந்து சாகுற நெலமையில இருக்குற கிழவன், கிழவிகள் வரை பிளக்ஸ் போர்டில் சிரிச்சுட்டு இருப்பாங்க. அதிலும் இப்ப கூலிங்கிளாஸ் போட்டு பந்தா காட்டுற ஆட்கள் தான் ரொம்ப அதிகம். சிறுசு முதல் பெருசு வரை ஆளாளுக்கு விதவிதமா கூலிங்கிளாஸ் போட்டு, அங்க இங்க கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டு, பிளக்சில் காட்டும் போஸ் இருக்கே, சினிமா நடிகர்களே தோத்துப் போயிருவாங்க.
அதிலும் சில குல விளக்குகள் இருக்காங்களே, பிளக்ஸ் போர்டுக்கென தனியாவே பட்டுசேலைகள் முதல் நகை செட்டுகள் வச்சிருப்பாங்க போல. தம்பதி ஜோடியா அவர்களின் புகைப்படம் பிளக்சின் மொத்த உயரத்துக்கும் கம்பீரமாக நிற்கும். நகைக்கடை விளம்பர பிளக்ஸ் மாடலிங் பெண்கள் தோற்கும் அளவுக்கு இவர்களின் பகட்டு ஆடம்பரம் பிளக்சில் ஜொலிக்கும். பெண்களுக்கு சளைச்சவங்க நாங்களும் இல்லை என ஆண்களும் ஜொலிப்பாங்க.
விழாவுக்கு நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளக்ஸ் வச்சு அழகு பாக்கறவங்க தான் ரொம்ப அதிகம். இதைச் சரியா திருத்தி சொல்லனும்னா, மண்டபம் புக் செய்ற அன்னிக்கே பிளக்ஸ் வச்சிருவாங்க. அதிலும் மண்டபங்கள் பக்கத்துல பக்கத்துல நிறைய இருந்துச்சுன்னா, பிளக்ஸ் போட்டியே இருக்கும். அடுத்த நாள் விழாவுக்கு முதல் நாள் நைட்டு பிளக்ஸ் கட்டுவாங்க. அந்த பிளக்ஸ் பக்கத்து மண்டபத்தில் நடக்கும் விழா பிளக்ஸ விட பெருசா இருந்தா ஒரே ரகளை தான். உடனே அவர்களுக்கும் அந்த நடு இரவில் அதைவிட பெருசா பிளக்ஸ் அடுச்சு போட்டிக்கு வச்சு ரகளையை கூட்டுவாங்க. மேலும் இந்த பிளக்ஸ் போர்டுக்கு காவலும் காப்பாங்க புல் கட்டு போதையுடன்.
கல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு??? அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே?
வட்டியில்லா மொய் பணத்தை வாங்க எந்த விழாவும் இல்லாட்டியும், இல்ல விழான்னு மண்டபத்தை புக் செஞ்சு, பத்திரிக்கை அடிச்சு அதுக்கும் கலர் கலரா போட்டோ போட்டு பிளக்ஸ் ஒட்டி கறி சோறு ஆக்கி போட்டு வசூல் வேட்டை நடத்துவாங்க நம்மூரு ஆட்கள்.
ஆட்டோலயும் பிளக்ஸ் கட்டுற இடமாக்கிருவாங்க நம்மூரு ஆட்கள். ஏதோ அரசியல் தலைவர் மாதிரி போட்டோ போட்டு, அவங்க சாதி பேரை போட்டு, சாதி சம்பந்தமா புரட்சி வரியையும் சேர்த்து போட்டு கலக்குவாய்ங்க.
விழாவுக்கு அடையாளமா மண்டபத்தில, அப்புறம் வீட்டுக்கு பக்கத்தில் பிளக்ஸ் வைக்கலாம். அதவுட்டுட்டு ஊரே அடிச்சு ஓட்டினா என்ன நியாயம்? இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா? வண்டியில ஓடறவங்க கவனத்தை திசை திருப்பும், பிளக்ஸ் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு வரும். காத்து அதிகமா வீசுனா பிளக்ஸ் சரிஞ்சு விழவும் வாய்ப்பு இருக்கு. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.
என்னமோ சொல்லனும்னு தோணுச்சி. சொல்லிட்டேன். யாரும் திருந்த மாட்டாயிங்க.
பகிர்ந்துள்ள படங்கள் கூகிள் இமேஜ் மூலம் பெறப்பட்டவை.