மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.
இந்த பஸ் ஸ்டாண்டு ஆரம்பிக்ரதுக்கு முன்னாடி வெறும் குப்பை மேடு தான்.... அப்புறமா இடங்களை வளைச்சு போட்டு பஸ் ஸ்டாண்டு கட்டி, ISO 9001 சான்றிதழ் வேற வாங்கியாச்சு. பஸ் ஸ்டாண்டு வந்ததுக்கு அப்புறம் அதை சுத்தி உள்ள இடங்களின் விலை மலையென ஏறி விட்டது. ஆமாங்க, ஒரு சென்ட் ரேட் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபது லட்சம் வரை விலை போகுது. எடத்தை பத்தி நாம ஏன் பேசிக்கிட்டு? அதெல்லாம் பண முதலாளிகள் பேசுற பேச்சு. இப்ப நம்மளுக்கு அந்த டாபிக் வேண்டாம். நாம பஸ் ஸ்டாண்டுக்கு வருவோம்.
பஸ் ஸ்டாண்டுக்கு மொத்தம் மூணு வழிகள் இருக்கு. ஒண்ணு பஸ் உள்ள போற வழி. இன்னொன்னு பஸ் வெளியே போற வழி. இன்னொன்னு நடுவுல அழகா ரவுண்டா பயணிகள் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. எப்பவுமே பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கும். பஸ் ஸ்டாண்ட சுத்தி காம்பௌண்ட் சுவர் கட்டியிருக்காங்க. அங்கிட்டு வெறும் குப்பை மேடு தாங்க. ஏதோ, இப்ப ஒரு வருஷ காலமா குப்ப நாத்தம் அடிக்கிறது இல்லை. எப்படியோ சுத்தம் பண்ணிட்டாங்க.. ஆனா அதுக்கு பதிலா பஸ் ஸ்டாண்டு கட்டுன காலத்துல இருந்து ஒரே ஒரு நாத்தம் மட்டும் மாறவே இல்லை. கரக்ட் நீங்க நெனச்சது, வேறென்ன நாத்தமா இருந்துர போகுது? எல்லாம் மூச்சா நாத்தம் தான்.
நம்ம அஞ்சா நெஞ்சன் பஸ் ஸ்டாண்ட சுத்தி சுத்தமான டாய்லெட் கட்டி விட்டிருக்காரு. நம்மாளுக அதை யூஸ் பண்ண மாட்டாங்க. திறந்த வெளி தான். குடலை புரட்டும் அந்த நாத்தத்தில், நம்மாளுக அந்த நாத்தமே பிடிக்காத மாதிரி மூக்கை பொத்திட்டு அதே இடத்துல போய் மூச்சா அடிப்பானுக பாருங்க, அவிங்க மேல கோவம் கோவமா வரும். அவன் நிக்ரதுக்கு கூட அங்க இடம் இருக்காது, ஒரே ஈரமா இருக்கும். இந்த நாத்தத்துக்கு மத்தில பூக்கடை, பழக்கடை, பங் கடை, டீக்கடை ன்னு நம்மாளுக மொச்சிக்கிட்டு இருப்பாங்க. அதென்னமோ தெரியலைங்க, இங்க இருக்கற பூக்கடையில நூறு எண்ணிக்கை மல்லிகை பூ எப்பவுமே அஞ்சு ரூவா தாங்க. விலை கூடவே கூடாது.
டவுன் பஸ் நிக்கற இடத்துக்கு பக்கத்துல தமிழ்நாடு தேயிலை கழகம் நடத்துற டீக்கடை இருக்கு. ஏதோ, டான் டீ ன்னு போடறான். டீ நல்லா டேஸ்டா இருக்கும். இங்க ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரெண்டு ரூபாய்க்கு விக்கிறாங்க. பிளாட்பாரத்துல நிக்க கூட இடம் இல்லாம கடைகளா இருக்கும். கடைய கட்டடத்துக்கு உள்ள வைங்கன்னா வெளில வச்சிருக்காங்க. மக்கள் நடந்து போனா டீயோ, வடையோ சாப்பிடுறவங்களை தட்டி விடாம போக முடியாது. அவ்வளவு ஆக்கிரமிச்சு இருப்பாங்க. நைட் நேரத்துல திடீர்னு டிபன் கடைகள் பிளாட்பாரத்தில் முளச்சிடும். உட்கார நல்ல டேபிள் சேர் கூட இருக்காது. அவிங்க சொல்றது தான் ரேட்டு. பஸ்கள் விடுற புகை, மற்றும் எல்லா தூசியும் அந்த நைட் நேரத்துல டிபன் மேல விழுகரது நம்ம கண்ணுக்கு தெரியவே தெரியாது. சாம்பாருன்னு பேருல ஊத்துவாங்க பாருங்க கடலை மாவு தண்ணிய, அய்யோ சாப்பிட சகிக்காது. அவிங்க விக்கற கூல்ரிங்க்ஸ், வாட்டர், பிஸ்கட் போன்ற எல்லா பொருட்களின் விலையும் எம் அர் பி ரேட்டை விட ரெண்டு ரூவா அதிகமா தான் இருக்கும். அவிங்க கிட்ட நியா���ம் பேசினோம் வச்சுக்கங்க, நம்மள அநியாயமா காதுல கேட்க கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவாங்க.
என்னடா, தலைப்புல ரெண்டு டாஸ்மாக் கடைன்னு போட்டுட்டு அத பத்தி ஒண்ணுமே சொல்லலைன்னு நீங்க கத்தறது என் காதுல விழுது. இப்ப உங்கள அங்க தான் கூட்டிட்டு போறேன்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு ரெண்டு பக்கமும் டாஸ்மாக் கடைகள் இருக்கு, பஸ் வெளியேற பக்கமா, பூ மார்கெட் எதுத்த மாதிரி ஒரு கடை. பஸ் உள்ளே போற பக்கமா, வரவேற்பு ஆர்ச் பக்கத்துல ஒரு கடை. ரெண்டு கடையும் காலையில இருந்து இரவு வரை செம கூட்டமா இருக்கும். பஸ் பயணிகள், டிரைவர், கண்டக்டர் கூட்டமா இருக்கும். பூ மார்க்கெட் பக்கத்துல பார் அளவு சின்னது. நைட் நேரத்துல பார்ல இடம் இல்லாம வெளியில நின்னு தண்ணி அடிப்பாங்க. எல்லோர் கையிலும் பெரிய பை ஒண்ணு தொங்கிக்கிட்டு இருக்கும். ஆமாங்க, எல்லோருமே பயணிகள் தான். நாமெல்லாம் ஊருக்கு சீக்கிரமா போக முடியுமான்னு பார்ப்போம். ஆனா அவிங்க நல்லா மப்பு போட்டுட்டு ஊருக்கு போவாங்க.
அடுத்ததா ஆர்ச் பக்கத்துல இருக்குற கடையில் பார் ரொம்ப பெரிசு. சரக்கு வாங்கிட்டு நம்மாளுக உள்ளே போனாங்கனா நல்லா மப்பு ஏத்திட்டு தான் வருவாங்க. எந்த நேரமும் கூட்டம் களை கட்டி இருக்கும். பார்ல ஸ்நாக்ஸ் ரேட் அதிகமா இருக்ரதுனால நம்மாளுக சரக்கை மட்டும் வாங்கிக்கிட்டு அந்த ஆர்ச் மறைவில நின்னுட்டு குடிப்பாங்க. கடைக்கு முன்னாடி சின்ன சின்ன தள்ளு வண்டியில பிரியாணி, சிக்கன், மட்டன் விப்பாங்க. அந்த கடைகளும் நல்லா கூட்டமா இருக்கும்.இப்போ ஏதோ பிரச்சினையில அந்த கடை இடம் மாறிருச்சு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி. மாட்டுதாவனில இருந்து சர்வேயர் காலனி போற வழில ஒரு சுடு காடு இருக்கு. அதுக்கு பக்கத்துல மாத்திட்டாங்க. சுடு காட்டுக்கும், கடைக்கும் சுமாரா நூறு அடி தூரம் தான் இருக்கும். சைட் டிஷ்சா பொன வாடைய பிடிச்சுக்கிட்டு தண்ணியடிக்க வேண்டியது தான். இன்னும் இங்க கடைக்கு பக்கத்துல தள்ளு வண்டி உணவு கடைகள் முளைக்கல. சீக்கரமா வந்துடும்னு நம்பிக்கையில தண்ணி அடிச்சுட்டு இருக்காங்க. சரிங்க இதோட உ���்கள அறுக்ரத முடிச்சுக்கறேன்.
டிஸ்கி:
நான் தினந்தோறும் வேலைக்கு சென்று வரும் போது இவைகளை பார்த்து வருவதன் பாதிப்பே மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டு பற்றியும், டாஸ்மாக் கடைகளை பற்றியும் இந்த பதிவு எழுதுவதற்கான காரணம். அவ்வளவே!
இந்த பதிவுக்கும் தீபாவளிக்கும் சம்பந்தம் இல்லிங்கோ....
மீள்பதிவு