வணக்கம் நண்பர்களே,
இந்த பதிவு நமது தமிழ்வாசியின் 500-வது பதிவு. இதுக்கெல்லாம் ஒரு பதிவா என நீங்கள் நினைக்கறீர்களா? ஆம்... சில விசயங்களை குறிப்பிட்டு சொன்னால் அதற்கு தனி சிறப்பு தான். என்ன சில விஷயங்கள் என கேட்கறீர்களா? இதோ பார்ப்போமே....!!!
தமிழ்வாசி பெயர்க் காரணம்:
தமிழ்வாசி என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்திங்க என நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிய விளக்கத்தை உங்களுக்கும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். 2010ம் வருட ஆரம்பத்தில் "என் தமிழ்ப் பதிவு" என்ற பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து என்ன எழுதுவது என தெரியாமலே நாளிதழ்களில் வரும் செய்திகளை இரண்டு மாதங்கள் வரை ஏதோ என பகிர்ந்து கொண்டிருந்தேன். யாராச்சும் வாசிப்பாங்களா? என வலைப்பூவை ரெப்ரெஷ் செய்து செய்து பார்ப்பேன். ம்ஹும்... பக்க எண்ணிக்கைகளை பார்த்தால் நான் ரெப்ரெஷ் செய்த எண்ணிக்கைகளையே காட்டும். ஹி..ஹி... என்ன செய்ய?
அப்படி காற்று வாங்கிக் கொண்டிருந்த என் வலைப்பூவில் திடீரென புதிய பதிவுகள் எழுதும் பக்கம் பிழை (ERROR) ஆனது. டெம்ப்ளேட்டில் என்ன மாற்றம் செய்தேன் என தெரியவில்லை. அந்த பக்கம் சரியாக திறக்கவில்லை. நானும் எப்படியாவது சரி செய்ய வேண்டும் என இணையத்தில் தேடினால் ஒரு வழியும் புலப்படவில்லை. பிறகு ஓரிரு மாதங்கள் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இணையத்தில் ஏதேதோ மேய்ந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அந்த வலைப்பூவில் என்ன தவறு செய்தோம், என என்னையே விசாரித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒன்றை அறிந்தேன். இனி புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிப்போம். அதன் டெம்ப்ளேட்-ஐ விவரம் தெரியாமல் திருத்தக் கூடாது என எனக்குள் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு வலைப்பூவுக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க விரும்பினேன்.
ஆனால் தமிழ் என்ற சொல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என விரும்பி அதையொட்டியே சில பெயர்களை இணையத்தில் தேடினால் அவை அனைத்தும் வலைதளங்களாகவெ இருந்தது. அப்போது தமிழ் என்பதை விடுத்தது வசிக்கிற ஊர் பெயரை மையமாக வைத்து சில பெயர்களை யோசித்துப் பார்த்தேன். அப்போது மதுரைக்காரன், என் மதுரை... இப்படி யோசித்து மதுரை வாசி என கடைசியில் முடிவு செய்தேன். அப்போது "வாசி" என்பதற்கு வாசித்தல் என்றும், வசித்தல் என்றும் இரு பொருள்கள் வருவதை கண்டு தமிழுடன் பொருத்தி தமிழ்வாசி என இணையத்தில் தேடியபொழுது இணையதளமா, வலைப்பூவோ இல்லை என அறிந்து அப்பெயரையே தேர்வு செய்தேன்.
"தமிழ்வாசி" தமிழகத்தில் வசிப்பவன் என்றும், தமிழை வாசிப்பவன் என்று இரு பொருள்களில் அமையும். சரி வலைப்பூ பெயர் வைத்தாயிற்று. அடுத்து பதிவுகள் எழுத வேண்டுமே, என்ன செய்வது என அறியாமலே சில தளங்களில் பகிர்ந்த பதிவுகளை எடுத்து (அவர்கள் அனுமதி பெறாமலே) எனது வலைப்பூவில் பகிர்ந்தேன். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என அறிந்ததும் என்னைத் திருத்திக் கொண்டேன்.
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)
தமிழ்வாசி பெற்றுத் தந்த நண்பர்கள்:
இணையத்தில் ��ாசிக்க வந்த காலத்தில் இருந்தே தொழில்நுட்ப தளங்களை அதிகமாக வாசித்து வருவதால் பல்சுவை பதிவுகளுடன் தொழில்நுட்பங்கள் பற்றியும் பதிவிட ஆரம்பித்தேன். இதனால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அதோடு மட்டுமில்லாமல் எனக்கு தெரிந்த நுட்பங்களை பிறருக்கும் சொல்லிக் கொடுத்துள்ளேன். நிறைய நண்பர்களின் வலைப்பூவின் தோற்றத்தை அமைத்துக் கொடுத்துள்ளேன். அவர்கள் மனம் மகிழும் போது எனக்கும் சந்தோஷம் தான்... தொழில்நுட்பத்திற்கு என தனியாக இணையப்பூங்கா என வலைப்பூ வேறு தொடங்கினேன். அதிலும் தற்சமயம் தொடர இயலவில்லை
இந்த பதிவுலகம் மூலமாக நான் நிறைய நண்பர்களைப் பெற்றுள்ளேன். இன்னும் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தப் பதிவுலகில் நான் எழுத வந்து பெற்ற பயன்கள் என்றால் எனது நண்பர்கள், நண்பர்கள், நண்பர்கள்... தான். என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் என் எண்ணம் என்னவென்று? "எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என" இந்த வரியை சில சமயம் எனது நண்பர்களிடம் அதிகமாக சொல்லி இருக்கிறேன். ஏனெனில் இவ்வாறு சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் சில சமயம் வந்துள்ளது. அந்த சில சந்தர்ப்பத்திற்காக இப்போதும் திரும்ப சொல்கிறேன்,"எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என"
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)
பதிவுலக ஓய்வு பற்றி:
சரி, நண்பர்களே... தலைப்பில் சற்று ஓய்வு பெறப் போகிறேன் என போட்டுள்ளேன். ஆமாம்... தொடர்ந்து என்னால் இடுகைகள் எழுத முடியவில்லை. காரணம், சொந்த வேலைகள் சில தலைக்கு மேலே உள்ளது. அதற்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. சில மாதங்களாகவே, பதிவுலகில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அப்புறம் சில நேரம் பதிவெழுத நேரம் கிடைத்ததால் சில பதிவுகள் எழுதி வந்தேன். ஆனாலும் சொந்த வேலைகளுக்கு கண்டிப்பாக நேரம் தேவை என்ற சமயம் இப்போது வந்து விட்டதால் இந்த ஓய்வு முடிவு... பதிவுலகில் ஓய்வு என்றாலும் எனது நண்பர்களை மறந்துவிட மாட்டேன். கண்டிப்பாக தொடர்பில் இருப்பேன். அவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிப்பேன்...
வலைச்சரத்தில் நான் ஆசிரியர் குழுவில் இருப்பதால் அதில் மட்டும் இணைந்திருக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். ஏனெனில் சில சமயம் மட்டுமே அதில் பொறுப்புகள் வரும். ஆகையால் அந்த பொறுப்பை கவனிக்க முடியும் என நினைக்கிறேன்.
எனது வேலைகள் நல்ல படியாக முடிந்த பின் மீண்டும் பதிவுலகம் பக்கம் வருவேன். எப்போது வருவேன் என உறுதியாக சொல்ல முடியவில்லை.
மெக்கானிக்கல் நண்பர்களுக்காக ஒரு தொழில்நுட்ப தொடர் எழுதி பாதியில் நிறுத்தியுள்ளேன். என்றைக்காவது நேரம் கிடைக்கையில் அந்த தொடரை மட்டும் எழுதலாம் என நினைத்துள்ளேன். முடியுமா என தெரியவில்லை. பார்ப்போம் முடியுமா என?
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)
ஐநூறாவது பதிவு பற்றி:
நண்பர்களே, தலைப்பில் 500வது பதிவு என போட்டுள்ளேன். ஆம்... இந்த பதிவு என் வலைப்பூவில் வெளியாகும் 500வது பதிவாகும். எப்படியோ சில காப்பி/பேஸ்ட் பதிவுகளையும் ( உண்மையை ஒத்துக்கனும்ல) உள்ளடக்கி ஐநூறை தொட்டாச்சு. இதுவரை என்னைத் தொடர்ந்து வந்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். நான் பதிவிட்ட ஒர்த் இல்லாத/ ஏதோ கொஞ்சம் ஒர்த்தான(ஹி..ஹி..) பதிவுகளையும் வாசித்து மெனக்கட்டு கமென்ட் எழுதிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தமிழ்வாசி இதுவரை:
மொத்த பதிவுகள்: 500மொத்த கருத்துரைகள்: 10371 (இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)
மொத்தம் பக்கப் பார்வைகள்:(இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)
மொத்தம் தொடர்பவர்கள்: 571
அலாஸ்கா மற்றும் இண்டி பிளாக்கரில்:
தொடர்புக்கு:
முகநூல்:https://www.facebook.com/sprakashkumar
முகநூல்:https://www.facebook.com/sprakashkumar
மொபைல் எண்: 9894567375
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...) என அடிக்கடி மேலே எழுதினேனே, அதற்கு காரணம் பதிவு கொஞ்சம் நீளமா இருக்குல அதான்... அடுத்து எப்போ எழுதப் போறோம்னு தெரியலைல. அதான் கொஞ்சம் நீளமா எழுதிட்டேன்.
நல்லதொரு நாளில் புதிய பதிவின் வழியாக உங்களை சந்திக்கும் வரை என்றும் நன்றியுடன் தமிழ்வாசி பிரகாஷ்.