வணக்கம் வலை நண்பர்களே,
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு சிறுநீர் கழிப்பிடத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடு பற்றி இப்பதிவின் மூலம் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிநாட்டினரும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் வருகை தருகிறார்கள். தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த சில வருடங்களுக்கு முன் கோவிலைச் சுற்றியுள்ள நான்மாட வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சிமென்ட் தளங்கள் போட்டு காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக்கப்பட்டு உள்ளது. கோவில் சுற்றுப்புறங்களும் ஓரளவு சுத்தமாகவே உள்ளது. அதோடு ஒவ்வொரு கோபுர வாயிலிலும், இலவச காலணிகள் காப்பகமும், கோவிலுக்குள் செல்பவர்களை காவல்துறையினர் முற்றிலும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். இப்படி கோவிலில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வரும் மதுரை மாநகராட்சி சுகாதாரத்தில் கோட்டை விட்டுவிட்டது.
ஆம், கோவிலின் கிழக்கு கோபுர வாயிலுக்கு சிம்மக்கல் பழ மார்கெட் வழியில் வருகையில், நவீன் பேக்கரி பக்கத்தில் வலதுபுறம் பாதை செல்கிறது. மேலும் அங்கிருந்து வடக்கு கோபுரத்திற்கும் வழி செல்கிறது. இந்த இடத்தில் தான் இருசக்கர மற்றும் பெரிய வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது. இந்த இடத்தில் pay/use டாய்லெட் இருந்தாலும், ஆண்களுக்கான இலவச சிறுநீர் கழிப்பிடம் ஒன்று உள்ளது. நாத்தம்னாலும் அப்படியொரு கெட்ட நாத்தம். தண்ணீர் வசதியும் இல்லை, உள்ளே சிறுநீர் கழிக்கும் ஆண்கள் தெரியும் அளவுக்கு வெறும் ஒரு மறைவு சுவற்றை வைத்தால் அது சிறுநீர் கழிப்பிடமாகிவிடும் போல. அந்த வழியாக கோவிலுக்கு செல்பவர்கள் மூக்கை மட்டுமல்ல, முகத்தையே பொத்திக்கொண்டு செல்லும் அவலம் உள்ளது. வாகனங்களை பார்கிங் செய்துவிட்டு கோவிலுக்கு வர வேண்டுமெனில் இந்த சிறுநீர் கழிப்பிடம் உள்ள வழியாகத் தான் வர வேண்டும்.
மதுரைக்காரர்கள் மட்டுமின்றி உலகிலிருந்து பலரும் மீனாட்சியை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த நாத்தத்தால், சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. அதோடு அவர்கள் நம்மூரைப் பற்றியும், கோவிலைப்பற்றியும் தவறாக மற்றவர்களிடம் சொல்ல வாய்ப்பாகவும் அமைகிறது. இந்த கழிப்பிடத்திற்கு எதிரில் அரசு அலுவலகம் ஒன்றும் உள்ளது. அந்த அதிகாரிகளும் கண்டும் காணாமலும் இருப்பார்கள் போல.
சுகாதார கேடு விளைவிக்கும் அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்தை, மக்களுக்கு சுகாதார கேடில்லாத, தொந்தரவில்லாத வகையில் அமைத்திட மதுரை கலெக்டர், மாநகராட்சி மேயர், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனாட்சியை தரிசிக்க வருபவர்களுக்கு உதவ வேண்டும் என இப்பதிவு வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.
7 கருத்துரைகள்:
அவசியம் கவனிக்க வேண்டிய விஷயம். மதுரைவாசிகள் முடிந்தவரை பேர்களிடம் கையெழுத்து வாங்கி கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி விடலாம்.
மதுரை கலெக்டர், மாநகராட்சி மேயர் மற்றும் பலரையும் அங்கு நிற்க வைத்தால் சரியாகி விடும்...
பொறுப்பான பிள்ளை. உலகமே புகழும் ஒரு கோவில் பக்கத்தில் இப்படி இருப்பது அரசாள்பவர்களுக்கும், அதிகாரம் செய்பவர்களுக்கும் தெரியாமலயா இருக்கும்!? அலட்சியம்தான் காரணம்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகாரிகள் கவனிப்பார்களா?
இடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி பிரகாஷ்.
மதுரைவாசி என்கிற முறையில் தமிழ் வாசியின் கோரிக்கையை நான் வழி மொழிகிறேன் !
த ம 4
பிரகாசின் கோரிக்கைக்கு என் ஆதரவும் பலம் சேர்க்கட்டும்.
வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...