மதுரையில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (10-05-2014) காலை காலை 10:30 முதல் 10:54 மணிக்குள் மீனாட்சியம்மன் சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மீனாட்சி கழுத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி |
திருக்கல்யாணத்தை காண அதிகாலை முதலே மேற்கு, வடக்கு ஆடி வீதிகளில் குவிந்தார்கள். மக்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் ஆடி வீதி முழுதும் பந்தல் அமைத்து குளிர்சாதன வசதியும் செய்திருந்தார்கள்.
காலை நான்கு மணிக்கு மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்தார்கள். பிறகு முத்துராமையர் மண்டபத்தில் ஊஞ்சல் ஆடினார்கள்.
மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் ஊஞ்சல் ஆடுகிறார்கள் |
அதன் பிறகு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் பல வண்ண பட்டாடைகள் சூடி மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கல்யாண சடங்குகள் சம்ரதாயங்கள் செய்து சரியாக 10:45 மணியளவில் சுந்தரேஸ்வரர் மீனாட்சி கழுத்தில் தாலி கட்டினார்..
கல்யாண மேடை வண்ண வண்ண பூக்களால் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருக்கல்யானதிற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணியர், தெய்வானையுடன் வெள்ளிக்கிழமை புறப்பாடாகி மீனாட்சி சொக்கநாதரை வாழ்த்தி அருளினார்கள்.
திருக்கல்யாணம் முடிந்ததும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். இங்கு மக்கள் வெள்ளம் மிக அதிகமாக இருந்ததால் காவல்துறையினர் உதவியுடன் கூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
திருமணமான பெண்கள் புதுக் கயிறு மாற்றுகிறார்கள் |
கல்யாண மேடை அலங்காரம் |
திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் அடங்கிய பாக்கெட்டுகளை பக்தர்கள் வழங்கினார்கள். மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்ததும், திருமணமான பெண்கள் தங்கள் பழைய தாலிக் கயிற்றை மாற்றி புதுக் கயிறு மாற்றினார்கள். ஆடிவீதி, கோவில் சுற்றுப்புற வீதி என எல்லா இடங்களிலும் புதுக் கயிறு மாற்றும் பெண்கள் கூட்டம் மிகுந்திருந்தது.
கல்யாண மொய் ரசீது, மஞ்சள் குங்குமம் கயிறு |
மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு கோவில் சார்பில் மொய்ப் பணம் வாங்கப்பட்டது. மக்கள் ஆர்வமாக மொய்ப்பணம் செலுத்தினார்கள்.
இக்கல்யாணத்தைக் காண மதுரை, மற்றும் சுற்று வட்டார மக்கள் கோவிலில் திரண்டிருந்தார்கள். கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் பக்தர்களை வெயிலில் இருந்து குளிர்விக்க தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதோடு பக்தர்கள் பசியாற பொங்கல், புளியோதரை, தயிர் சோறு என பலரும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். மக்கள் வரிசையாக நின்று வாங்கி வயிறார சாப்பிட்டார்கள்.
பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல் வழங்கப்படுகிறது |
கருக்கு போட்டு வைக்கும் பக்தர்கள் |
சில பக்தர்கள் வேஷம் போட்டு கையில் கருக்கு பொட்டு வைத்துக் கொண்டு பக்தர்களுக்கு நெற்றியில் வைத்து விட்டார்கள். இவர்களிடம் மக்கள் சென்று ஆசி வாங்கினார்கள்.
கோவிலில் கூட்டம் மிகுதியாகி, நெரிச்சல் ஏற்படுவதால் பக்தர்களுக்கு கல்யாண சாப்பாடு கடந்த சில ஆண்டுகளாக சிம்மக்கல், மீனாட்சி பஜார் அருகில் உள்ள சேதுபதி பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடமும் கல்யாண சாப்பாடு மிக அருமையாக, ருசியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கல்யாண சாப்பாடு |
இரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடனும், அருள்மிகு சுப்பிரமணியர், பெருமாள் ஆகியோர் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் 6 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. கீழமாசி வீதியிலிருந்து புறப்படும் தேரோட்டம் தெற்கு, மேற்கு, வடக்கு மாசி வீதிகள் வழியாக வந்து நிலையை அடையும்.
வரிசையாக நிற்கும் பக்தர்களுக்கு விசிறி மூலம் விசுறப்படுகிறது |
காவல்துறை வாகனத்தில் கண்காணிப்பு கேமரா |
மேற்கு கோபுரத்திற்கு செல்லும் வழியில் நேதாஜி ரோட்டில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது |
நிறைய பக்தர்களுக்கு சாப்பாடு தீர்ந்து விட்டது. வெளியில் குப்பைகளுக்கு மத்தியில் கல்யாண சாப்பாடு. |
மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்க்கும், தரிசிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கல்யாண சாப்பாடு ருசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் அடுத்த வருட திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் அருள் பெறுங்கள் நண்பர்களே!
வருகிற செவ்வாய்க்கிழமை கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். மறுநாள் புதன் கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பக்தர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
2013ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2013 - சிறப்புப்பார்வை பார்க்க இங்கு கிளிக்கவும்.
6 கருத்துரைகள்:
இன்னிக்கு ஜெயா டிவில கொஞ்ச நேரம் நேரடி ஒளிபரப்பில் பாக்க முடிஞ்சது. அழகான படங்களோட இங்க தரிசிக்க முடிஞ்சது. ரொம்ப சந்தோஷம். பிரகாஷ்... நீ சொல்லியிருக்கற மாதிரி அடுத்த வருஷமாவது உன்னோட சேர்ந்து திருக்கல்யாணத்தைப் பாக்கவும் (நான் படிச்ச) சேதுபதியில கல்யாணச் சாப்பாடை ருசிக்கவும் அந்த மீனாக்ஷி அருள புரியட்டும் எனக்கு.
உங்கள் பார்வைப்பகிர்வு ஊடாக நானும் திருக்கல்யாணத்தைப்பார்த்த் உணர்வு.பகிர்வுக்கு நன்றி எமக்கும் நேரம் அமையும் போது மதுரையை தரிசிப்போம்.
ஆஹா..நல்ல கவரேஜ் பிரகாஷ்.
படங்கள் அருமை... இந்த வருடம் வர முடியவில்லை... அடுத்த முறை சந்திப்போம்...
நேரில் பார்த்து தரிசித்த மாதிரி இருக்கு.
படங்களைப் பார்த்தபோது நேரில் பார்த்த உணர்வு. நன்றி பிரகாஷ்....
உணவு வீணாக்குவது பார்க்கும்போது தான் எரிச்சல்.